கவனகக்கலை

தமிழ் மக்களின் பழங்கலைகளில் கவனகக் கலையும் ஒன்று. கவனகம் என்பது ஒரே நேரத்தில் தன்னைச்சுற்றி நடக்கக் கூடிய பல்வேறு நிகழ்வுகளை நினைவில் நிறுத்தி முடிவில் தொகுத்துக் கூறுவதாகும். இது நினைவாற்றலின் உயர்ந்த வடிவம்.

நமது முன்னோர்கள் நூறு நிகழ்வுகள்வரை நினைவில் நிறுத்திச் சொல்லக்கூடிய ஆற்றல் பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் அரசர்களை மகிழ்விக்கவும், செல்வந்தர்கள் மத்தியிலும் இந்தக் கவனகக் கலையைச் செய்திருக்கின்றார்கள். அவாகளுள் முக்கியமானவர்கள்.

 • செய்கு தம்பிப் பாவலர்
 • சிறிய சரவணக்கவிராயர்
 • தே.போ. கிருட்டிணசாமி பாவலர்
 • நா.கதிர்வேல் பிள்ளை
 • அஷ்டாவதானியார்
 • அச்சுத உபாத்தியாயர்
 • அரங்கநாதக்கவிராயர்
 • அப்துல்காதர்
 • அரங்கசாமி அய்யங்கார்
 • சரவணக் கவிராயர்.

அரண்மனைகளிலும் அடுக்குமாடிச் செல்வந்தர்கள் வீடுகளிலும் மட்டுமே காண முடிந்த கவனகக்கலையைத் தமிழகத்தில் பட்டி தொட்டிகளுக்கெல்லாம் கொண்டு சென்ற பெருமை பதின்கவனகர் கோவில்பட்டி இராமையா அவர்களையே சாரும். அவர் கண்பார்வை இல்லாதவர். பத்து வகையான கவனகக்கலை நிகழ்ச்சி நடத்துவதில் வல்லவர். அவர் இன்று உயிருடன் இல்லை.

அவருக்குப்பின் கவனகக்கலையைத் தமிழகம் மட்டுமல்லாது கடல் கடந்து உலகம் முழுவதும் கொண்டு சென்ற பெருமை பதின்கவனகர் (தசாவதானி) இராமையா அவர்களுடைய புதல்வர் பதினாறுகவனகர் திருக்குறள் கனகசுப்புரெத்தினம் அவர்களையே சாரும். அவரை இன்றைய கவனகக் கலையின் தந்தை என்று சொல்லலாம். அடுத்த கவனகர் செங்கல்பட்டு திருக்குறள் இரா.எல்லப்பன் அவர்கள். இவர் திருக்குறளில் மட்டும் முப்பதிற்கும் மேற்பட்ட கவனகங்களைச் செய்யக் கூடியவர். மேலும்.

 • கலைச்செழியன்
 • சகோ.சி.பிரதீபா
 • திருமூலநாதன்
 • க.பிரதிபா

போன்ற கவனகக் கலைஞர்களும் உள்ளனர்.

கவனகக்கலையில் எனது நிலை

நான் எட்டாவது வயதில் திருக்குறளைக் கற்கத் தொடங்கினேன். பத்தாவது வயதில் குறளை முழுமையாக மனனம் செய்துமுடித்து திருக்குறள் கவனக நிகழ்ச்சிகளைச் செய்யத் தொடங்கினேன்.அதைத்தொடர்ந்து (கி.பி 1 முதல் 10000) பத்தாயிரம் ஆண்டுகளுக்கான தேதியைச் சொன்னால் கிழமையைச் சொல்லும் ஆண்டுக் கவனக நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறேன். எனது பதினைந்தாம் வயது தொடங்கி

 • குறள் கவனகம்
 • எண் கவனகம்
 • எழுத்துக் கவனகம்
 • கூட்டல் கவனகம்
 • பெயர்க் கவனகம்
 • ஆண்டுக் கவனகம்
 • மாயக்கட்டக் கவனகம்
 • வண்ணக் கவனகம்
 • தொடு கவனகம்
 • ஒலிக் கவனகம்

என பதின்கவனக (தசாவதானம்) நிகழ்ச்சியைப் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக் கழகம் தொலைக்காட்சிவரை செய்திருக்கிறேன். பதினாறுகவனகர் திருக்குறள் கனகசுப்புரெத்தினம் அவர்களின் கவனக நிகழ்ச்சியை மூன்று முறை பார்த்து அவரைச் சந்தித்து பேசி இருக்கின்றேன். அவரே கவனகக்கலையில் எனது மானசீகக் குரு.

நான் கவனகக்கலையைக்கற்றுக் கொள்வதற்கு வழிகாட்டி, சில கவனகங்களையும் கற்றுக்கொடுத்த ஆசான் செங்கல்பட்டு கவனகர் எல்லப்பன் ஆவார்கள்.

எனது குடும்பத்தினரும,; நான் பயிலும் பள்ளியின் ஆசிரியப் பெருமக்களும், பள்ளித் தோழர்களும் கொடுத்த ஊக்கமும் பாராட்டும்தான் நான் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும், பொதுமேடைகளிலும், தொலைக்காட்சிகளிலும், 70க்கும் மேற்பட்;ட கவனக நிகழ்ச்சிகள்; நடத்துவதற்குப் பேருதவியாக இருந்தன.

கவனகக்கலையை நான் கற்றுக்கொண்டதோடு கடந்த இரண்டு ஆண்டுகளாக எனது வீட்டிலேயே குறள்மணிகள் திருக்குறள் பயிற்சிப்பள்ளி தொடங்கிக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்து வருகின்றேன்.

தமிழர்களின் அறிவுக்களஞ்சியமும், அழியாச் செல்வமுமான உலகப் பொதுமறையாம் திருக்குறளை பார் முழுவதும் பரப்புவதே எனது வாழ்நாள் பணியாகும்.

தமிழர்களின் அரிய கலைகலுள் ஒன்றான கவனகக் கலையை உலகம் முழுவதும் கொண்டுசெல்வதன் மூலம் தமிழர்களின் அறிவாற்றலை, நினைவாற்றலை உலகறியச் செய்வதே எனது நோக்கமாகும்.